சென்னை:தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 6) வெளியானது. இந்நிலையில்,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி நிவேதா மற்றும் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டுப்பட்ட மாணவர் சின்னதுரை ஆகிய இருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, இருவருக்கும் திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.
முதலமைச்சரைச் சந்தித்த பின் திருநங்கை மாணவி நிவேதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருவரும் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார்கள். முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
மேலும், தன் உயர்கல்வி செலவு முழுவதும் அரசு ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் தெரிவித்தார். மருத்துவம் படிப்பது தான் தன் இலக்கு. என்னுடைய மருத்துவப் படிப்பிற்கு அரசு உதவி செய்யும் என நம்புகிறேன். பள்ளியில் சக மாணவிகள் தன்னை ஒரு திருநங்கை என்று ஒதுக்காமல் நன்றாகப் பார்த்துக்கொண்டனர்"எனத் தெரிவித்தார்.