திருநெல்வேலி:தமிழகத்தில் 22,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளது. தலைமை வன பாதுகாவலர் தலைமையிலான வனத்துறையினர் இதனை முழுமையாக நிர்வகித்து வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வனப்பகுதிகள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. வனக்கோட்டம் மற்றும் வனச்சரகங்களாக வனப்பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு, வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
வன விலங்குகளின் நடமாட்டம், விலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வனக் காவலர்கள், வனவர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு அந்தந்த ரேஞ்ச் வாரியாக பணி ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வன நிலங்களை வனச்சரக ரீதியாக வரையறுப்பதிலும், மாநில வன எல்லைகளை துல்லியமாக வரையறுப்பதிலும் வனத்துறைக்கு பெரும் சிரமம் இருந்து வருகிறது.
குறிப்பாக, விலங்குகள் ஏதாவது உயிரிழந்து விட்டாலோ அல்லது விலங்குகளைக் கணக்கெடுக்கும்போது குறிப்பிட்ட எல்லையைக் கணக்கிட்டு பிரச்னையை சரி செய்வதிலும் பெரும் சிரமம் இருந்து வருகிறது. எனவே, டிஜிட்டல் முறையில் ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு துல்லியமாக வனப் பகுதிகளை வரையறுக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.