தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் வெளுக்கும் கனமழை; மெட்ரோ, புறநகர் ரயில், விமான போக்குவரத்து நிலவரம் என்ன?

கனமழை காரணமாக சென்னை கோட்டத்தின் புறநகர் ரயில் சேவைகள் குறைந்த இடைவெளியில், குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சேவை (கோப்புப்படம்)
போக்குவரத்து சேவை (கோப்புப்படம்) (Credit - ANI, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 12:51 PM IST

சென்னை:ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்று சென்னை கோட்டத்தின் புறநகர் ரயில் சேவைகள் குறைந்த இடைவெளியில், குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. மேலும், புயலின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இன்று மதியம் 12.55 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - தன்பாத் சிறப்பு ரயில் (ரயில் எண். 03326) நாளை (01.12.2024 ) நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை

சென்னையில் பரவலாக பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை சென்னைக்கு செல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் பயண ஆலோசனைகள் மற்றும் பயண திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

முன்னதாக இண்டிகோ நிறுவனம் சென்னை, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் தங்களுடைய விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சென்னையிலிருந்து இயங்கும் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அல்லது உங்கள் வசதிக்கேற்ப மாற்று விமானத்தை மீண்டும் முன்பதிவு செய்ய இண்டிகோ இணையதளத்தை அணுகி பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்

அதேபோல சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில், மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல தாமதமின்றி தொடங்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

அழகப்பா சாலை மூடப்பட்டுள்ளதால் அவ்வழியாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக திரும்பி டாக்டர். நாயர் பாயிண்ட் சென்று ஈவிஆர் சாலையை அடையலாம். ஹோலி ஃபேமிலி பள்ளி முதல் செல் பெட்ரோல் பங்க் வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு இரு திசைகளிலும் வாகனங்கள் செல்லலாம். ஜிபி சாலை mஓடப்பட்டுள்ளதால் அண்ணா சிலையிலிருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டையை அடைய வுட்ஸ் சாலை வழியாகச் செல்லலாம். ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து ஜிபி சாலை நோக்கி வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி ஸ்மித் சாலை மற்றும் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details