சென்னை:தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக, ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரம்பாக்கம், செட்டியார் அகரம், வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுடன், நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் அவர் பிரச்சாரம் செய்தார். அவருடன் மதுரவாயல் திமுக எம்.எல்.ஏ காரம்பாக்கம் க.கணபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அப்போது பிரச்சாரத்தின்போது பேசிய டி.ஆர்.பாலு, “எல்லோருக்கும் உரிமைத் தொகை வந்துவிட்டதா? மாதம் ரூபாய் வாங்குகிறீர்களே.. அதற்குப் பெயர்தான் 'உரிமைத் தொகை'. சிலருக்கு வரவில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் கணக்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 28 ஆயிரம் பேருக்கு வரவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதால், விரைவில் அவர்களை கணக்கெடுத்து உரிமைத்தொகை கொடுக்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.