தேனி:கும்பக்கரை அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை வனத்துறையினர் வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து, அருவியில் குளிக்கவும், செல்லவும் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் இன்று (ஜன.19) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
கும்பக்கரை அருவி ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான மற்றொரு பள்ளி சிறுமியின் உடல் மீட்பு!
இந்நிலையில், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்காணல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை வனத்துறையினர் வெளியேற்றியுள்ளனர்.
மேலும், கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளதால், இன்று பிற்பகல் 12.30 மணி முதல் சுற்றுலா பயணிகளை குளிக்கவும், அருவிக்குச் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக, விடுமுறை தினத்தையொட்டி வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.