சென்னை: புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அஜீத் குமார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யா என்பவருடன் திருமணமாகியுள்ள நிலையில், கடந்த மாதம் 21ஆம் தேதி புளியந்தோப்பு பகுதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆவதால், திவ்யா அவரது தாய் வீடான புளியந்தோப்பு கேஎம் கார்டன் முதல் தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ஜூன் 25ஆம் தேதி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துத் தூங்க வைத்துள்ளார். அதன் பிறகு குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டதால், உடனடியாக சிகிச்சைக்காக குழந்தையை புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளது என்று கூறியதால் திவ்யா குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றார். அதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலையும் அதேபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துத் தூங்க வைத்துள்ளார். அப்போது குழந்தை மூக்கிலிருந்து ரத்தம் வந்ததால், பயந்து போன திவ்யா உடனே எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியில் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக பிரமுகர்கள்:சென்னை தேனாம்பேட்டை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் தணிகை அரசு என்பவர் வேனில் மாத கட்டணத்தில் சவாரி ஏற்றுவதற்கு மாணவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வந்துள்ளார். அப்போது, அதே கல்லூரியில் சவாரி ஏற்றும் வேன் உரிமையாளரான பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உட்பட 6 ஓட்டுநர்கள் எதற்காக அத்துமீறி கல்லூரியில் நுழைந்து குறைந்த விலையில் சவாரி ஏற்றுவதாக துண்டு பிரசுரங்கள் தருகிறாய் எனக் கேட்டு தணிகை அரசை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.