சென்னை:தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க், தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, வரவேற்பாளர், பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வன பாதுகாவலர், காவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள 6,244 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
முன்னதாக, இதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது. இந்த தேர்வு எழுத 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக இருக்கும் நிலையில், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
இதனையடுத்து, குரூப் 4 எழுத்துத் தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கப்பட்டு, மதியம் 12.30 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெற்றது. அதன் பின்னர், 15 நிமிடங்கள் மாணவர்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.