தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டண நடைமுறை தேவை - பசுமை தீர்ப்பாயம் கூறிய பதில்? - Vinayagar Idol Dissolve Issue - VINAYAGAR IDOL DISSOLVE ISSUE

National Green Tribunal: விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்குக் கட்டணம் நிர்ணயம் செய்ய சட்டரீதியான நடைமுறை தேவை என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 7:37 AM IST

சென்னை: பொதுமக்களின் மத வழிபாட்டு உரிமை சம்பந்தப்பட்டுள்ளதால், விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய சட்டரீதியான நடைமுறை தேவைப்படுகிறது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த அரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த வழக்கில், விநாயகர் சதுர்த்தியின் போது இயற்கை, நீர்நிலைகளை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க வேண்டும்.

இது தொடர்பாக, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிகளை உருவாக்கியும், அதை செயல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளதால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி சிலைகளை கரைக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் தலைமையில், பொதுத் துறை செயலாளர், வருவாய் நிர்வாகத் துறை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

மேலும், இந்த கூட்டுக்குழு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு முன், குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூடி, விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கை நீர்நிலைகளை உருவாக்குவது, முன்கூட்டியே சிலை கரைக்கும் நீர்நிலையை அடையாளம் காண்பது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு சிலைகள் தயாரிப்பதை தடுப்பது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல, விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக, சிலைகளை கரைக்க அனுமதி கோருபவர்களிடம் இருந்து, சிலையில் அளவுக்கு ஏற்றவாறு வசூலிப்பதற்கான கட்டணத்தைக் கூட்டுக்குழு நிர்ணயிக்க வேண்டும் எனவும், அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலையை கரைத்தால் அபராதம் விதிக்க வேண்டும் எனவும், இத்தொகையை, தொடர்புடைய நீர்நிலையைப் பராமரிக்க செலவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகளைக் கரைக்கக் கட்டணம் நிர்ணயிப்பது மற்றும் அபராதம் விதிப்பதை பொறுத்தவரை பொதுமக்களின் மத வழிபாட்டு உரிமை மற்றும் உணர்வு சார்ந்தது என்பதால் அதை செயல்படுத்த சட்டரீதியான செயல்முறை தேவைப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் கருதி, சிலைகளைக் கரைக்கும்போது ஏற்படும் மாசுவை கண்காணிக்க பொதுமக்கள் பங்களிப்பை தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கரைப்பின்போது மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மாசு ஏற்படாத வகையில் சிலைகளை கரைக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார். இதனைப் பதிவு செய்த தீர்ப்பாயம், உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு பஞ்சு போன்ற பூரண கொழுக்கட்டை செய்து அசத்த வேண்டுமா? இந்த குறிப்பை மறந்துடாதீங்க!!

ABOUT THE AUTHOR

...view details