தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி TNGDA போராட்டம் அறிவிப்பு!

ஆட்கள் பற்றாக்குறையில், கூடுதல் பணி சுமையுடன் வேலை பார்க்கும் நிலையில், தனிநபருக்கும், மருத்துவ தொழிலுக்கும் சிறிதும் மரியாதை இல்லாதது அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

TNGDA அறிக்கை மற்றும் லோகோ
TNGDA அறிக்கை மற்றும் லோகோ (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 8:04 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேலான இடங்களை நிரப்பப்பட வேண்டும் எனவும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் இடங்களை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று (நவ.25) முதல் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் செந்தில், பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆன்லைனில் நடைபெற்றது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "கடந்த சில மாதங்களாக திருச்சிராப்பள்ளி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவர்களை குற்றவாளிகள் போல் பாவித்து கொடுமையாக நடத்தி வருகின்றனர்.

கொடுமைக்கு முடிவே இல்லையா?: குறிப்பாக மகப்பேறு மருத்துவர்களை கர்ப்பிணி தாய் மரணம் ஆடிட் என்ற பெயரில் மிரட்டியும், தரக்குறைவாகப் பேசியும், துன்புறுத்தியும் வருகின்றனர். மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆடிட்டோரியத்தை பூட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துக் கொண்ட பிரச்சனை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு கர்ப்பிணி மரணம் அடைந்தாலும் தொலைத்து விடுவேன் என்று மிரட்டும் நிலை, தருமபுரியில் கர்ப்பிணி தாய் மரணம் நிகழ்ந்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை எதுவாக இருந்தாலும் மூடி விடுவேன் என்று செய்தி.

ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் ஒப்பி அடிக்கிறார்கள் என அவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா என கூறும் DPH, மருத்துவர் இல்லாத ஆம்பூர் மருத்துவமனையில் செவிலியர் பிரசவம் பார்த்து ஏற்பட்ட ரத்தப்போக்கை வேறு மருத்துவமனையிலிருந்து சென்று ரத்தப் போக்கை நிறுத்த முயற்சி செய்த மகப்பேறு மருத்துவர் குறை கூறும் DMS, NHM ல் மகப்பேறு ஆடிட்-டில் மகப்பேறு மருத்துவர்களை அதற்குரிய மருத்துவத் தகுதியின்றி கொடுமைப்படுத்தும் சில இணை இயக்குநர்கள் இவைகளுக்கு முடிவே இல்லையா?

ஆள் பற்றாக்குறை, பிற குறைபாடுகள் இருந்தும் கூட அரசை குறை கூறாமல் எவ்வளவு நோயாளிகள் வந்தாலும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை ஏன் இப்படி சித்தரிக்கிறார்கள்? இது தவிர ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் (பெண் மருத்துவர்கள் உட்பட) இரவு 11 மணிக்கு கூட்டம் நடத்துதல். இதற்கு மேல் தாங்க முடியாததால் DMS, DPH and DME மை சேர்ந்த பெரும்பாலான மருத்துவர்கள், குறிப்பாக விரக்தியின் எல்லையில் இருக்கும் மகப்பேறு மருத்துவர்கள் கொண்டு வந்த பிரச்சனைகள் கூட்டத்தில் விவரமாக விவாதிக்கப்பட்டது.

வேலையை விட்டுச் செல்ல வற்புறுத்தல்: சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் மருத்துவர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடந்தன. இருந்தும் மருத்துவரைத் தாக்கியது தவறு இல்லை என்ற கருத்துகளை அதிகமாக பரப்பின. இதற்குக் காரணம் உயர் அதிகாரிகள் மருத்துவர்களைப் பொதுவெளியில் விட்டுக் கொடுக்கும் நிலை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடைசியாக மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் பேசிய NHM MD முதல்வர்கள் மற்றும் DME அவர்களை 400 துறை தலைவர்கள் முன் மிகவும் தரக்குறைவாக நடத்தியுள்ளார்.

அதாவது, "ஏதாவது ஒரு கர்ப்பிணித்தாய் மரணம் அடைந்தால் மகப்பேறு துறை தலைவரையும், மருத்துவக் கல்லூரி முதல்வரையும் பிடித்துக் கொள்வேன் என்றும், ஒரு காய்ச்சல் கேஸ் மரணமடைந்தால் கூட அந்த துறை தலைவரையும், மருத்துவக் கல்லூரி முதல்வரையும் பிடித்துக் கொள்வேன் என்று கடுமையான வார்த்தைகளில் மிரட்டியுள்ளார். இது தவிர கூலிக்கு வேலை செய்கிறார்கள், மருத்துவர்கள் சம்பளம் பத்தவில்லை என்றால் வேலையை விட்டு செல்லட்டும்.

ஆட்கள் பற்றவில்லை காலி இடங்கள் இருக்கின்றன என்றாலும், வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வேலையை விட்டு செல்லட்டும். வேலை செய்யும் இடத்தில் மருத்துவர்களைத் தாக்கினாலும் வேலை செய்ய வேண்டும், முடியவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள்" என்று பேசி உள்ளார். சுமார் 5000 பணியிடங்கள் காலியாக இருந்தும், மருத்துவர்கள் கூடுதல் பணி சுமையுடன் பணி புரிந்து வரும் நிலையில், இது போன்ற தனிநபருக்கும், மருத்துவ தொழிலுக்கும் சிறிதும் மரியாதை இல்லாததால் அனைத்து அரசு மருத்துவர்களும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

மேலும், அரசு மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் குறை கூறுவதால் மூன்றரை ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு அவ பெயர் ஏற்படுகிறது. இந்த உயரதிகாரிகள் தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால், சங்கம் முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு அரசு மருத்துவர்களை கொடுமைப்படுத்தி வரும் உயர் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க சங்கம் வேண்டுகிறது.

கோரிக்கைகள்:

  • 5 ஆயிரத்திற்கு மேலான காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்
  • நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் இடங்களை உருவாக்குதல் வேண்டும்
  • உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதலின்படி "Anonymous Maternal Death Audit" எந்த பெயர்களுமின்றி மட்டுமே மகப்பேறு மரணங்கள் ஆடிட் செய்ய வேண்டும். (கேரளாவில் போல நோயாளி, மருத்துவர், மருத்துவமனை பெயரின்றி சிகிச்சையின் விபரத்தை பற்றி மட்டும்)
  • மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை அலுவலக நேரத்தில் நடத்த வேண்டும்
  • மருத்துவர்கள், செவிலியர்கள் பெரும்பான்மையினர் பெண்கள், அவர்களின் பாதுகாப்பு கருதி மாலை 5 மணிக்கு மேல் கூட்டம் நடத்துதல் கூடாது மற்றும் மருத்துவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்
  • மருத்துவ குறியீடுகள், சில விபரங்களை வைத்து மருத்துவர்களுக்கு மருத்துவமனைகளுக்கு ரேங்க் வழங்குதல் முதலியவற்றை நிறுத்துதல் வேண்டும்
  • பிற அரசு ஊழியர்கள் போல மருத்துவர்கள் அனைவருக்கும் விதிமுறைகளின்படி, விருப்ப ஓய்வு அளிக்கப்பட வேண்டும்

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி அலுவலகங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி மட்டும் இவ்வளவு கோடியா? - ஆர்டிஐ-யில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கவன ஈர்ப்பு போராட்டங்களின் விவரம்:

  1. நவம்பர் 25 முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ESI டிஸ்பென்சரிகள், மாவட்ட, தாலுகா, பிற மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகள் அனைத்திலும் உள்ள மருத்துவர்கள் மாநில மாவட்ட உயர் அதிகாரிகளால் நடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி கூட்டங்கள், மருத்துவமனை மற்றும் துறை ரீதியான கூட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்படும்
  2. நிர்வாக ரீதியான மாநில மாவட்ட மருத்துவமனை துறை அளவிலான அனைத்து வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து வெளியேறுதல்
  3. மாநில மாவட்ட வட்டார அளவிலான அறிக்கைகள், PICME பதிவேற்றங்கள், லக்க்ஷயா, காயகல்ப் போன்ற நிகழ்வுகள் அனைத்தையும் புறக்கணித்தல்
  4. வருமுன் காப்போம் முகாம், ஊனமுற்றோர் பரிசோதனை முகாம், குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள், அனைத்தும் நிறுத்தப்படும்
  • இதற்கு மேலும் சுமூக முடிவு ஏற்படாவிட்டால், நவம்பர் 26 முதல் மகப்பேறு துறையில் அனைத்து அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் அனைத்தும் (Elective Surgeries in OBG) DME, DMS, DPH, ESI மருத்துவமனைகளில் நிறுத்தப்படும்
  • NHM MD ஆணையை ஏற்று நவம்பர் 26 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு நாள் காய்ச்சல் என்றாலும், அந்த நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்படுவார்கள். கூடுதலாக ஆயிரக்கணக்கில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தச் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தலைமை மருத்துவரை சங்கம் கேட்டுக் கொள்கிறது. இதன் பின்னரும் தீர்வு காணப்படாவிட்டால், நவ.28ஆம் தேதி கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details