சென்னை: தமிழ்நாட்டில் வீடுகளுக்கு பொருத்துவதற்கு ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கு சர்வதேச அளவில் விடப்பட்ட டெண்டரை மின்சார வாரியம் ரத்து செய்துள்ளது. இந்த டெண்டர் அதானிக்கு விடப்பட்டு, அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்த நிலையில், தற்போது அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் துணை மின் நிலையங்களை தனியார் பராமரிக்க அதிமுக ஆட்சியின் போது டெண்டர் விடப்பட்டது. அப்பொழுது எதிர்க்கட்சிதாக இருந்த திமுக பல்வேறு போராட்டங்களையும், பொதுத்துறை நிறுவனத்தை தனியாரிடம் தாரை வார்க்க கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்தியது.
மேலும், நிலக்கரி ஊழலில் பெறும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன் வைத்தவுடன் தமிழ்நாடு ஆளுநரிடமும் நேரடியாக மனு அளித்தார். தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
அதனை திமுக ஆட்சியில் செயல்படுத்துவதற்கு சர்வதேச அளவில் டெண்டர் விட்டனர். அந்த டெண்டரில் மிகக் குறைந்த விலையை அதானி குழுமம் நிர்ணயம் செய்தது. அதனைத் தொடர்ந்து அந்த குழுமத்திற்கு டெண்டர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டது.
இதற்கு அறப்போர் இயக்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை வெளியீட்டும் வந்தன. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு சர்வதேச அளவில் விடப்பட்ட டென்டரை ரத்து செய்து அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்படுவதாகவும், மிகவும் குறைவான தொகையை குறிப்பிட்டிருந்த அதானி நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் ரத்து செய்துள்ளது. அதற்கு, அதானி நிறுவனம் குறிப்பிட்டுள்ள தொகை, மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் தற்போது டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:தாராவி சீரமைப்புக்கான அதானி டென்டர்...பம்பாய் உயர்நீதிமன்றம் கூறியது என்ன?
இந்த நிலையில் அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், "அதானிக்கு டெண்டர் கொடுக்கப் போவதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தது. உண்மையா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. தற்பொழுது ஸ்மார்ட் மீட்டர் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களின் கேள்விக்கணைகள் இதனால் தான் மிக முக்கியமானது. அடுத்து நிலக்கரி இறக்குமதி ஊழலில் FIR போட தொடர்வோம் நம் கேள்விகளை.
தமிழ்நாடு அரசு அதானி ஊழலை காப்பாற்றுவதை நாம் முறியடிக்க வேண்டும். மின்சார வாரியத்தில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் செய்த அதானியை கருப்புப் பட்டியலில் சேர்த்து இருக்க வேண்டாமா? நம்ம EB பில்லை குறைக்க கேட்போம். அதானியிடம் இருந்து ஊழல் பணத்தை மீட்டெடுக்க கேட்போம். வாருங்கள் ஜனவரி 5ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் சந்திப்போம்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.