சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வீரராகவராவ் இன்று பொறியியல் மாணவச் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை (ரேங்க் லிஸ்ட்) வெளியிட்டார்.
செங்கல்பட்டு மாணவி முதலிடம்:அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ''பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தொசிதா லட்சுமி என்ற மாணவி முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நிலஞ்சனா என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
சேலம் மாணவி முதலிடம்: அதேபோல, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டின்கீழ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராவினி என்ற மாணவி முதலிடத்தையும், கோயமுத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த கிருஷ்ணா அனுப் இரண்டாம் இடத்தையும், வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த சரவணன் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு பொறியியல் தரவரிசை பட்டியலில் 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்ணை 65 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதில், 58 பேர் மாநில பாடதிட்டத்திலும் 7 பேர் இதர பாடத்திட்டத்திலும் படித்தவர்கள்.
கலந்தாய்வு: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22ம் தேதியும் பொது பிரிவில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25ம் தேதியும் தொடங்குகிறது. அதேபோல, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 29ம் தேதி தொடங்குகிறது.