தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடிக்கணக்கில் மோசடி புகார் - தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மைத்துனர் கைது! - CEATING CASE

முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சுஹைல் அகமது
கைது செய்யப்பட்ட சுஹைல் அகமது (ETV BHARAT Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 12:40 PM IST

திருச்சி: தஞ்சை ரகுமான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராகத் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் இயங்கும் பஸ்கள் மீது முதலீடு செய்தால் மாதம்தோறும் லாபத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை நம்பி ஏராளமானார் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமாலுதீன் இறந்துவிட்டார். கமாலுதீன் இறப்புக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் லாபத்தொகை மற்றும் முதலீட்டுத் தொகை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய தொகை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் முதலீட்டாளர்கள் தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர், பின்னர் அந்தப் புகார் திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது, மேலும் அந்த நிறுவனம் ரூபாய் 400 கோடி வரை மோசடி செய்ததாக சுமார் 6000 பேர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கமாலுதீன் மனைவி ரெஹானா பேகம், சகோதரர் அப்துல் கனி, நிறுவனத்தின் மேலாளர் நாராயண சுவாமி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கமாலுதீனின் மைத்துனரான சுஹைல்அகமது (36) வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் சுஹைல் அகமது கத்தார் நாட்டிலிருந்து ஊருக்கு வருவதாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் கத்தாரில் இருந்து வந்த சுஹைல் அகமதுவை கைது செய்தனர், பின்னர் அவரை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் டிராவல்ஸ் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முதலீட்டாளர்களை விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details