திருநெல்வேலி: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி நகரம் எஸ்என் ஹைரோட்டில் உள்ள வ. உ. சி. மணி மண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகரிடம், தமிழக பாடத்திட்டம் குறித்து ஆளுநர் விமர்சித்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ஆளுநர் இப்படிப்பட்ட தர்க்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என்று பலமுறை நாங்கள் கூறியிருக்கிறோம். தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பற்றி முழுமையாக ஆளுநருக்கு தெரியுமோ? தெரியாதோ? என தெரியவில்லை. அவர்கள் சந்தேக கண்ணோடு அதை பார்க்கிறார்களா? என்றும் தெரியவில்லை.
இப்போது விண்வெளியில் சந்திரயான்-3 விண்கலம் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. உலகமே வியக்கும் வகையில் சந்திரயான்-3 திட்டம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. வீரமுத்துவேல் என்பவர்தான் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக உள்ளார். அவர் தான் அவருடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி, தமிழ் வழி கல்வி பயின்றவர், அரசுப் பள்ளியில் படித்தவர்.
அவர்தான் சந்திரயான்-3 திட்டத்தில் இயக்குநராக இருந்து இப்போது பெருமையும் சேர்த்துள்ளார். அவர் மட்டுமின்றி விண்வெளி ஆராய்ச்சி நிலைய தலைவராக ஏற்கனவே பணியாற்றிய சிவனும் தமிழர்தான். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரும் அரசுப் பள்ளியில் தமிழக பாடத்திட்டத்தை படித்துதான் மிக உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
இந்தியா பெருமைப்படுகின்ற வண்ணம் இன்று விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் என எடுத்துக் கொண்டால் சிவன் தலைவராக இருந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இயக்குநராக இருந்துள்ளார். தற்போதைய இயக்குநர் வீரமுத்துவேலும் தமிழர்தான்.