சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. அந்த வகையில், சட்டப்பேரவையில் நேற்று (ஜூன் 25) பட்டு வளர்ச்சித் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:-
நிதி உதவி:
- தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைக்க ரூ.24 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
- 6,500 ஏக்கரில் அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- மல்பெரி நாற்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவி அளிக்க நாற்பது ஏக்கர் பரப்பில் கிசான் மல்பெரி நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள்:
- பட்டுக்கூடுகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 80 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும்.
- பட்டுப்புழு வளர்ப்பில் 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு நோய்த்தடுப்பு மருந்து பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
- 250 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பவர் டில்லர் கொள்முதல் செய்து வழங்கப்படும்.