சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பிறப்பதிகளை பிடித்தம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும், 19 நாட்களுக்கான சம்பளம் உட்பட பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் சுமார் 20,000 மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். இவர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் போராட்டம் நடத்திவிட்டு பள்ளி திறந்தவுடன் பள்ளிக்கு சென்று பாடம் எடுத்து வந்தனர்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளவாறு தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து அரசு ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைத்து, விரைவில் அதற்குரிய தீர்வு காணப்படும் என அறிவித்தது. இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றனர்.
ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 8ம் தேதி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு எந்தவித ஊதிய பிடித்தமும் செய்யப்பட மாட்டாது என கூறியதாக போராட்டக் குழு தெரிவித்தது.