சென்னை:ஆதித்தனாரின் மூத்த மகன் ராமச்சந்திர ஆதித்தனாரின் 90 வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னையில் அவரது திருவுருவ படத்திற்கு திருமாவளவன், ஜெயக்குமார், சீமான்,செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், "ஆதித்தனார் அவர்கள் ஊடகத்துறையில் ஆற்றிய பங்களிப்பை போன்றே, சமூகம் மற்றும் அரசியல் தலைமை உள்ளிட்ட பணிகளிலும் குறிப்பாக ஈழத் தமிழரின் நலனில் மிகுந்த அக்கறை காட்டியவர்.
அதானி ஊழல் முறைகேடு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் அதானி போன்றோர் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு அவர்களின் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எஸ்சி.,எஸ்டி மக்களை மாநில வாரியாக பல்வேறு குழுக்களாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அதிகாரம் அளிக்கக்கூடிய தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது நல்ல எண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாக தெரியவில்லை.
பட்டியல் சமூகத்தினரை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. எஸ்சி எஸ்டி சமூகத்தினர் ஒரே தொகுப்புக்களாக உள்ளார்கள். அதில் கணிசமாக மக்கள்தொகை கொண்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அவசியம் என்பதை திமுக தலைவராக இருந்த கலைஞர் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினர். அதில் விசிக சார்பில் பங்கேற்று அந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தோம். அதன் அடிப்படையில் அருந்ததியினர் சமூகத்தினருக்கு மூன்று சதவீதம் இடஒதுக்கீட்டை திமுக வழங்கியது.
விசிக ஆர்ப்பாட்டம்:இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பது மூன்று அல்லது நான்கு குழுக்களாக பிரித்து அந்த மாநிலங்களில் இருக்கின்ற இடஒதுக்கீட்டை பங்கு போட்டு தர வேண்டும், அவர்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உள்ளனர். உள் ஒதுக்கீடு என்பது வேறு; ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பிளவுபடுத்துவது என்பது வேறு. அதை எதிர்த்து வருகின்ற 14 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அவருடைய கொலைக்கு காரணமானவர்கள், தூண்டி விட்டவர்கள் திட்டமிட்டவர்கள், பண உதவி செய்தவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர் படுகொலையை வைத்து அரசியல் காய்களை நகர்த்துவதை விசிக விருப்பமில்லை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் உடைமைகள் அனைத்தையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.
இதைதொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,"ஃபார்முலா 4 கார் பந்தயம் நிச்சயமாக நடக்கக்கூடாது. நாட்டில் சட்டம் ஒழுங்கு, கஞ்சா, போதை, விலை ஏற்றம், விலைவாசி ஏற்றம், மின்கட்டண உயர்வு ,சொத்து வரி உயர்வு என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. தமிழ்நாடு பல பிரச்சனைகளால் தீப்பற்றி எரியும்போது ஃபார்முலா கார் ரேஸ் அவசியமா? எந்த விதத்திலும் இந்த பந்தயம் நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம்.