தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா? - ஐகோர்ட் கேள்வி! - TN POLICE CHARGESHEET ISSUE

குற்ற வழக்குகளில் குறித்த காலத்திற்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது குறித்து மாநில உள்துறை செயலாளருக்கு தெரியுமா? என்று சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 8:31 AM IST

சென்னை:வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, '2015ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை' எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, 'காவல்துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல எனவும், தமிழ்நாடு முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை' என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

'இதனால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுவதாகவும், நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளது' எனவும் வேதனை தெரிவித்த நீதிபதி, 'நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல் துறையினர் பின்பற்றுவதில்லை' என்றும் குறிப்பிட்டார்.

மேலும், 'வழக்குப்பதிவு செய்யக் கோரியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் ஏராளமான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது, காவல்துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது' எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, 'காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா?' எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜனவரி 31ஆம் தேதி அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details