மதுரை: மதுரை சத்ய சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர் என்ஜி மோகன். இவர் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட, மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடந்த 2019-ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்த நிலையில் சுமார் 4 வருடங்கள் மேலாகியும் வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பதில் அளிக்காததால் மேல்முறையீடு செய்திருக்கிறார். மேல்முறையீடு செய்தும் முறையாக பதில் அளிக்காமல் இருந்ததால், சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஆணையம், வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பதில் அளிக்காமல் இவர் அலைக்கழிக்கப்பட்டதை உறுதி செய்தது. அதனை தொடர்ந்து, போடி நாயக்கனூர் வட்டாட்சியர் மணிமாறன் ரூ. 10 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து வட்டாட்சியர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ரூ. 10 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை மோகனுக்கு தபால் மூலம் அனுப்பட்டுள்ளது. மேலும், மோகனுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட்டுள்ளது.