திருவாரூர்:திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகை எம்பி வை.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியதாவது," முதலமைச்சரின் திட்டங்கள் தமிழகம் முழுவதும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்டம் தோறும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்தது மட்டும் அல்லாமல் அதனைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். குறிப்பாக நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி மூலம் இந்த டெல்டா மாவட்டம் முழுமைக்கும் பயனடைய உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகள் 75 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம். இன்னும் ஒரு சில பணிகள் மட்டுமே மீதமுள்ளது. அதற்கான பணிகளும் கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தை அதிமுகவினர் விமர்சனம் செய்வதைத் தவிர வேறு ஏதும் அவர்களுக்கு தெரியாது. அமெரிக்கா பயணத்தின் போது ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. குறிப்பாக இதுவரை தமிழ்நாட்டிற்கு வராத பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இந்த பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும்" என தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தாலும் விடுதலையாவதில் சிக்கல்? - சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?