தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்யணும்? அமைச்சர் தீவிர ஆலோசனை! - ANNA UNIVERSITY INCIDENT

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவம் போன்ற எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கோவி.செழியன் ஆலோசனை
அமைச்சர் கோவி.செழியன் ஆலோசனை (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 9:23 PM IST

சென்னை:பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் சென்னை தலைைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பேசும்போது, "இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கும் வகையில் சீரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டை உலக அளவில் உயர்கல்வியில் சிறந்த முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவத்தில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்வி நிறுவனங்களில் இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகள், காண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக கூர்நோக்கு பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு மின்விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.

கல்வி நிறுவன வாளகத்திற்குள் உள் நுழைபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் தகவல்கள் பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும். வளாகத்திற்குள் கண்டிப்பாக மாணவர்கள், பேராசியர்கள், பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.

அவசர காலங்களில் உதவும் வகையில் தமிழ்நாடு காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள “காவல் உதவி” செயலியின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவர்களின் ஆலோசனையினையும் பெற்று அவற்றை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பதிவாளர்களின் ஆலோசனைகளை வரவேற்கிறோம்." என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரி வளாகங்களில் வளாக பாதுகாப்பு, மாணவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வு மற்றும் பிறநடைமுறைகளை சரியான நேரத்தில் நடத்துதல், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல், உதவி மையம், உள் புகார் குழுவின் நடவடிக்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு படிப்புகள், மின் ஆளுமை தொடர்பான முன்னெடுப்புகள், இடை நிற்றல் சதவீதத்தின் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details