சென்னை: HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த வைரஸ் வீரியத்தன்மை கொண்ட வைரஸ் அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
HMPV வைரஸ் பாதிப்பு குறித்து பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கொண்டு வந்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, "HMPV வைரஸ் தற்போது சீனாவில் பரபி வருவது என்றாலும் கூட இது பல ஆண்டுகளுக்கு முன்பாக கண்டறியப்பட்ட வைரஸ்.
இணை நோய் உள்ளவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு நுரையீரலை பாதிக்கப்படக்கூடிய அளவிலான ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 714 பேருக்கு பரிசோதனை செய்ததில் பலருக்கு இந்த நோய் இருந்தது கண்டறியப்பட்டது.
சுவாச நோய் தொற்றுகள் தானாகவே குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த வைரஸிற்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இனி உலகம் முழுவதும் பல்வேறு வகையான வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கும். வைரசுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று சௌமியா சுவாமி நாதனே தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் வீரியத்தன்மை கொண்ட வைரஸ் அல்ல. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் தானாகவே குணமாகிவிடும்.
இதற்காக பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இந்த வைரஸ் தொற்று உள்ளவர்கள் பொது இடங்களில் முக கவசங்களும் கையுறைகளையும் அணிந்து கொண்டு போவது நல்லது." என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
சீனாவில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு HMPV வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்திய நிலவரப்படி கர்நாடகா மாநிலத்தில் 2 பேர், தமிழகத்தில் சென்னை, சேலத்தில் தலா ஒருவர், குஜராத்தில் ஒரு நபருக்கு என மொத்தம் ஐந்து பேருக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வைரஸ் குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்ச வைரசால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.