சேலம்:நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையினை நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மேட்டூர் அணையானது ஜூலை 28ஆம் தேதி அன்று பாசனத்திற்காக திறக்கப்பட்டது. மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் திறக்கப்பட்டு ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மாயவரம் தடுப்பணை கட்டப்பட்டது. அதேபோல், மோகனூரில் கதவணை அமைக்கப்பட்டது. மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் மேச்சேரி பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்ப பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா பிடிவாதமாக இருக்கும் நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், "மேகதாது அணையை கட்டவிட மாட்டோம் என்ற தீர்மானத்தில் தமிழக அரசு உள்ளது" என்றார்.
மேலும், “தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டதை செயல்படுத்த முடியாது. மேட்டூர் அணை உபரி நீரை மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் காவிரி நீரினை குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்றார்.