கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். மேலும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வருவாய்த் துறையினரை உடனடியாக விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கபட்டுள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோர்க்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு ஏடிஜிபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது.
இதுவரை 132 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிபிசிஐடியின் 6 குழுக்கள் வழக்கை விசாரித்து வருகின்றன. விசாரணை விரிவாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக டிஜிபி தலைமையில் அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில், கள்ளச்சாராயத்தில் 99 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது கள்ளக்குறிச்சியில் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராயத்தில் 8.6 முதல் 29.7 வரை மெத்தனால் கலந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.