சென்னை:காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி, மார்க்ஸ் என்பவர் 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர், வேளாண் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழக அரசு உரிமம் வழங்காததால், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் எந்தப் பணிகளும் துவங்கப்படவில்லை.
கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் மேம்பாட்டுச் சட்டம் என்ற சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளதாகவும், இந்தச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இதுநாள் வரை எந்த புதிய உரிமமும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:கந்து வட்டி கொடுமை; திருவாரூரில் பியூட்டி பார்லர் உரிமையாளர் தற்கொலை!