சென்னை :கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை, பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது நேற்றிரவு 8.30 மணியளவில், மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் (12578) மோதியது.
இதில், ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டது. அதில் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. பயணிகள் ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு தகவல் கிடைத்தவுடன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், சம்மந்தப்பட்ட நிகழ்விடத்திற்கு அயல்நாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர்
சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க :மத்திய அரசு விழிக்க எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? - ராகுல் சரமாரி கேள்வி!
இந்நிகழ்வில் பயணிகள் ரயிலில் சுமார் 1,600 பேர் பயணம் செய்ததாக தெரிய வருகிறது. சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 19 நபர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் மூன்று பயணிகள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.