சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம், நாளை (ஜன.22) நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். மேலும், மத்திய, மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்பட அரசியல் பிரமுகர்கள், திரைப்படப் பிரபலங்கள், வெளிநாட்டினர் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக அயோத்தியில், துணை ராணுவம், காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு பொருட்களும் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில், திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோரும் அயோத்தியை நோக்கிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் தினமான நாளை, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், பிரசாதங்கள் வழங்குதல் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டு உள்ள X சமூக வலைத்தளப் பதிவில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள X வலைத்தளப் பதிவில், “ஜனவரி 22, 2024 ஆன அன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.