சென்னை:2022-2023ம் கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை சேவைகள் வழங்கும் செயல்முறையைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. இதனடிப்படையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களாக அறிவிக்கப்பட்ட மொத்தம் 46 ஆயிரத்து 932 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.
இவர்களில் 146 மாணவர்கள் (82 ஆண்கள் மற்றும் 64 பெண்கள்) அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் மன நலம் கருதித் தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடு பெறுவதற்காக மாவட்ட மனநல உளவியலாளர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் மூலமும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், 2022-2023 கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதிக் குறைந்த குறியீட்டு மதிப்பெண்கள் பெற்ற 65 ஆயிரத்து 823 மாணவர்களுக்கு '104' தொலைப்பேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் '14416' நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள் மூலம் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.
2023-2024 கல்வியாண்டில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்களில் தேர்ச்சி பெறாத 51 ஆயிரத்து 919 மாணவர்கள் (32164 ஆண்கள் மற்றும் 19755 பெண்கள்) என பெறப்பட்ட பட்டியலிட்ட மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது.