சென்னை:தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது உயர்கல்வி துறையின் மீதான 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
உயர்கல்வி துறையின் 15 புதிய அறிவிப்புகள்:
- அச்சு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 6 புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
- கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் 21 கோடி மடிப்பீட்டில் கட்டப்படும்.
- அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கு என தனி ஓய்வறைக் கட்டிடம் 8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்த எந்திரனியல் ஆய்வகம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- வேலூர்,தஞ்சாவூர், மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- GATE, IES, CAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
- அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்படும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் 7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
- தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாறு ஆராய்ச்சி மன்றம் மீள்ருவாக்கம் செய்யப்படும்.
- திருச்சிராப்பள்ளி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம் 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், உயர்கல்வி துறை கொள்கை விளக்கம் குறிப்பில், திறமையான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் பெயரில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.