சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புத் திட்டமான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் நகர்ப்புர உள்ளாட்சிகளில் நடத்தப்பட்ட 2,058 முகாம்களில் மக்களிடம் பெறப்பட்ட 8.74 லட்சம் மனுக்கள் மீது ஒரே மாதத்தில் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளது. தற்போது, இரண்டாம் கட்டமாக 12,525 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அன்று கோவை மாநகரில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளைப் பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
முகாம்கள்:ஐந்து மாதங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில் 520 முகாம்கள், புறநகர்ப் பகுதிகளில் 265 முகாம்கள் என ஏறத்தாழ ஒரு வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் முக்கியமான 13 துறைகள் மூலம் 44 சேவைகள் குறித்தும், முன்னதாக குறிப்பிடப்படாத சேவைகள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இரண்டாம் கட்ட முகாம்கள்: நகர்ப்புர உள்ளாட்சிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2 லட்சத்து 64 ஆயிரம் மனுக்களும், பிற சேவைகள் மூலம் பெறப்பட்ட 6 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.
எனவே, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முதற்கட்ட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்த திட்டம் குறித்த சிறப்பு முகாம்களை நடத்திட அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இந்த முகாம்களை நடத்திடவும், இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15க்குள் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.