தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சுதந்திரம் கிடைக்க நேதாஜியே காரணம்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

TN Governor RN Ravi: 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லை என்றால், 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்திருக்காது' எனவும், '1942க்கு பின்னர் காந்தியின் சுதந்திரப் போராட்டம் பலனளிக்கவில்லை' என மாணவர்கள் இடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி பேசினார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 6:03 PM IST

சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தர் அரங்கில், சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா இன்று (ஜன.23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இந்தியத் தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மாணவர்களின் ரத்ததான முகாமை பார்வையிட்டு, புகைப்பட கண்காட்சியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

இந்தியத் தேசிய ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டன. மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பள்ளி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஆங்கிலேயர் சென்ற பின்னர் நீண்ட காலம் நம் பாரம்பரியத்தைப் பண்பாட்டையும், ஆன்மீக சிறப்பையும் மறந்தோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் மறந்தோம். குழப்பத்திற்கும் ஆளானோம். நான் இந்தியத் தேசிய ராணுவம் குறித்து மிகவும் வியப்பு அடைகின்றேன். எண்ணற்ற வீரர்கள் இந்தியத் தேசிய ராணுவத்தில் பங்கு பெற்று உள்ளனர். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்கவர்களாகவும், நேதாஜியின் இந்தியத் தேசிய ராணுவத்திலும் தமிழர்கள் நிறைந்து இருந்துள்ளனர்.

ஒரு சிலரை மட்டும் தான் நாம் சுதந்திரப் போராட்ட வீரர்களாக அடையாளப் படுத்தி உள்ளோம். ஆனால், நமக்குத் தெரியாத நிறையச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லை. நேதாஜியின் படையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நேதாஜி பெண்கள் படையைக் கட்டமைத்த பின்னர் 7 தலைமுறைகளுக்கு பிறகே இந்திய இராணுவத்தில் பெண்கள் பொறுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

1942ஆம் ஆண்டிற்குப் பிறகு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தேசிய ராணுவத்தினுடைய கட்டமைப்பு மற்றும் அவர்களின் கப்பற்படை மற்றும் விமானப்படையின் அச்சுறுத்தல் தான் நமக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது. மேலும், 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நேதாஜியும் இந்தியத் தேசிய ராணுவமும் காரணம். நேதாஜி இல்லையென்றால், 1947-ல் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்திருக்காது.

இந்திய தேசிய காங்கிரசால் தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணம் அவ்வளவுதான். ஆனால், இந்தியத் தேசிய ராணுவத்தின் புரட்சி தான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான மிக முக்கியமான காரணமாக இருந்தது.

அப்போதைய இங்கிலாந்து பிரதமர் இந்தியத் தேசிய காங்கிரஸின் போராட்டம் இந்தியா சுதந்திரம் அடைய ஒரு சிறிய காரணம் எனவும், நேதாஜியின் உடைய புரட்சியும் இந்தியத் தேசிய ராணுவத்தின் உடைய பலமும் தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க மிகப்பெரிய காரணமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த இந்தியர்களும் புரட்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்தியத் தேசிய ராணுவமும் புரட்சியில் ஈடுபட்டிருந்தது, அதனைக் கண்டு தான் பிரிட்டிஷ் இனி இந்த நாட்டை நம்மால் ஆள முடியாது என்ற எண்ணத்திற்கு வந்தனர் அப்போதே இந்தியத் தேசிய காங்கிரஸின் போராட்டம் பலனளிக்காது என தெரிந்து விட்டது. நம் பல்கலைக்கழகங்கள் நேதாஜி, INA, குறித்து ஆராய்ச்சியில் அதிகளவில் ஈடுபட வேண்டும்" என பேசினார்.

இதையும் படிங்க:ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மட்டுமே அட்டண்டன்ஸ்.. அண்ணா பல்கலை சுற்றறிக்கையால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details