சென்னை : சென்னை சேப்பாக்கம், டிடி மண்டல அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் டிடி தொலைக்காட்சி பொன்விழா நிகழ்ச்சி இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கிய நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் முன், முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடப்பட்டது சர்ச்சைக்குயானது.
பின்னர், இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், "ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க :தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஆளுநரா, ஆரியநரா? என முதல்வர் காட்டம்.. தவறு செய்தது யார் என கருநாகராஜன் விளக்கம்!
இந்நிலையில், ஆளுநர் மாளிகை வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.