சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் சமஸ்கிருத தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய ஆர்.என்.ரவி, “சமஸ்கிருத தினம் பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக சமஸ்கிருத பாரதி நிறைய முயற்சிகளை செய்துள்ளது.
சமஸ்கிருதம் கற்றுக் கொண்டவர்கள் தேசத்திற்கு பெரும் சேவை செய்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் ரிஷிகள் நமக்கு அளித்த இரண்டு அழகான பரிசுகள் தர்ஷன், மொழி ஆகும். ஒளி என்பது தரிசனம், மொழி என்பது சமஸ்கிருதம். நிலப்பரப்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து கிடக்கும் பாரதம் என்ற இந்த மாபெரும் ராஜ்ஜியத்தை ரிஷிகள் உருவாக்கியுள்ளனர்.
பாரதத்தில் பல்வேறு மொழிகள் உள்ளது, பல்வேறு உணவு பழக்கங்கள் கொண்ட மக்கள் உள்ளனர். பன்முகத் தன்மையின் முகமாக இந்தியா விளங்குகிறது. சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டும் அல்ல, ஒருவர் தன் வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது. பிறரை எப்படி நடத்த வேண்டும், எப்படி மதிக்க வேண்டும் என்பதை போதிக்கிறது. சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாச்சாரம் தோன்றியது.