திருவாரூர்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் அளவிலான விரிவடைந்த கூட்டம் இன்று (ஜனவரி 27) காலை நடைபெற்றது. இதில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரைக் கர்நாடகா அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறியதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை, ஒரு சில பகுதிகளுக்குப் பாதிப்பையும் ஒரு சில பகுதிகளுக்கு நன்மையையும் ஏற்படுத்தியது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போதுவரை எந்த கணக்கெடுப்பையும் நடத்தவில்லை.
இந்த நிலையில், சம்பா பயிர்கள் அறுவடை தருணத்திலும், தாளடி பயிர்கள் கதிர்கள் முற்றும் தறுவாயிலும் உள்ளன. இந்த பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழல் உள்ளது. தண்ணீர் பாய்ச்சவில்லையெனில் அந்தப் பயிர்கள் முற்றிலும் பதராகிவிடும்.
ஜனவரி 28ஆம் தேதி முதல் குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணை மூடப்படும் என்ற நியதி இருந்தாலும். இதுவரை குறுவை சாகுபடிக்கான தண்ணீர் உரிய அளவு திறந்துவிடப்படவில்லை. இதனால் பிப்ரவரி 15ம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மேட்டூர் அணையைத் திறந்து விட்டு பயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.