ஈரோடு:யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க எந்த அரசியல் கட்சியும் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஓட்டு போடுவதில்லை என்றும், விவசாயிகள் ஓட்டு நோட்டாவுக்கே என்றும் கிராமங்கள் தோறும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை தொடர்ச்சியாக சேதம் செய்து வருகிறது.
இவ்வாறு விவாசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகள், விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொள்வது தொடர்கதையாக உள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்புக்குள் வரும் காட்டு யானை, காட்டுப்பன்றி போன்றவைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இவற்றை தடுக்க வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க எந்த அரசியல் கட்சியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், கடந்த தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை என்பதை சுட்டிக்காட்டி, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு போடுவதில்லை என்று கூறி, நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள பவானிசாகர், கோடேபாளையம், பனையம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் மற்றும் சங்க நிர்வாகிகள் விவசாயிகளிடம் நோட்டீஸ் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.