சென்னை:தொலைக்காட்சி பிரபலமும், நடிகையுமான அனிதா சம்பத் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பேசி இணையத்தில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகே உள்ள கொழுமணிவாக்கம் ஊராட்சிக்குச் சென்ற அனிதா சம்பத், அங்கிருந்து பதிவிட்ட வீடியோ ஒன்று பேசுபொருளாக மாறியது.
கொழுமணிவாக்கம் ஊராட்சி குளத்திற்கு நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டு பணிக்கு 11.36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சுவற்றில் எழுதப்பட்டிருந்ததை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா சம்பத் பதிவிட்டிருந்தார்.
அதில், "இந்த படிக்கட்டுகளை கட்டுவதற்கு 11 லட்சம் ஆகுமா? 12 லட்சத்தில் பலர் வீட்டை கட்டுகின்றனர், இந்த ஒரு படிக்கட்டிற்கு 11 லட்சமாம்" என பேசி பதிவிட்டிருந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. மேலும், இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலர் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பு (TN FACT CHECK) தனது எக்ஸ் தளத்தில், அனிதா சம்பத் பேசியதை சுட்டிக்காட்டி 'வதந்தியை பரப்பதீர்கள்' என கூறி விளக்கத்தை அளித்துள்ளது. அதில், "காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டில், திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர்வரத்து மற்றூம் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன" என பதிவிட்டது.
அதனைத் தொடர்ந்து அதற்கான செலவினங்கள் பட்டியலையும் குறிப்பிட்டுள்ளது. "படித்துறை அமைப்பதற்கு ரூ.1.70 லட்சம், inlet and outlet அமைக்க ரூ.0.66 லட்சம், நடைபாதை அமைத்தல் பேவர் பிளாக்கிற்கு ரூ.6.17 லட்சம், நடைபாதையைச் சுற்றிலும் மின் விளக்குகள் அமைக்க ரூ.0.96 லட்சம். மேசைகளுக்கு ரூ.0.12 லட்சம், GST-க்கு ரூ 1.73 லட்சம் என மொத்தம் செலவு ரூ 11.36 லட்சம்" என்ற கணக்கினை பதிவிட்டு "வதந்தியை பரப்பாதீர்" என பதிவிட்டுள்ளது. இதனிடையே, அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த பதிவினை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகர் பிரசாந்திற்கு ரூ.2,000 ரூபாய் அபராதம்! சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி! - ACTOR PRASANTH BIKE RIDE ISSUE