தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போனை ஆப் செய்தால் கடும் நடவடிக்கை பாயும்: அமைச்சர் செந்தில் பாலாஜி வார்னிங் - MINISTER SENTHIL BALAJI

மின்சார வாரியத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் தமது செல்போனை எந்தக் காரணம் கொண்டும் அணைத்து வைக்கக் கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.

மின்சார வாரிய அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
மின்சார வாரிய அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் (Credit - TNDIPR)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 6:40 PM IST

சென்னை: மழைக் காலங்களில் தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படாமல், மின்சார பணிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள வாக்கி டாக்கி இயந்திரங்களை உடனடியாக கொள்முதல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையின் எதிர்காெள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வி மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 15,93,893 சிறப்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் மண்டலங்களில் 5,983 மின்கம்பங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. சாய்ந்த நிலையில் இருந்த 3,193 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன, புதியதாக 2,604 மின் கம்பங்கள் இடையில் பொருத்தப்பட்டுள்ளது.

12,034 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன, 3,314 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன, பழுதடைந்த 2,040 பில்லர் பாக்ஸ்கள் சரிசெய்யப்பட்டுள்ளன, இதுதவிர்த்து சுமார் 534 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்காக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் மண்டலங்களில் 392 மின்மாற்றிகள், 4,444 மின் கம்பங்கள் மற்றும் 2,484 கி.மீ. மின்கடத்திகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களின் கையிருப்பு நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் சென்னை மண்டல 15 பொறுப்பு அலுவலர்களுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

  • சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளில், அடையாளம் காணப்பட்ட அனைத்து தாழ்வு நிலையிலான பில்லர் பாக்ஸ்கள் (Pillar Box) தரை மட்டத்திற்கு மேல் ஒரு மீட்டர் உயரத்தில் நிறுவும் பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும்.
  • அனைத்து நடவடிக்கைளையும் சென்னை மற்றும் காஞ்சிபுர மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் மேற்கொண்டு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவதை உறுதி செய்ய வேண்டும்.
  • பில்லர் பாக்ஸ்கள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதை அந்தப் பகுதியை சார்ந்த செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெளியில் தெரியும் மின் கேபிள்கள் உடனடியாக புதைக்கப்பட வேண்டும்.
  • அம்பத்தூர் பகுதியில் தாழ்வான நிலையில் செல்லும் மின் கடத்திகளை உடனடியாக உயர்த்தப்பட வேண்டும்.தேனாம்பேட்டை பகுதியில் அடையாளம் காணப்பட்ட தாழ்வு நிலையிலான பில்லர் பாக்ஸ்கள் உடனடியாக உயர்த்தப்பட வேண்டும்.
  • மயிலாப்பூர் பகுதிகளில், குடி நீர் வடிகால் பணிகளின் போது சேதமடைந்த மின் கேபிள்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்
  • தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை முன்பே கேட்டறிந்து அவைகளின் தயார்நிலை உறுதி செய்யப்பட வேண்டும்.
  • மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். வாரிய வாகனங்கள் அனைத்தும் பழுது நீக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • காற்றுடன் கூடிய மழையின் போது மிகத் தாழ்வான நிலையில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்க உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.
  • இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

செல்போனை ஆப் செய்தால் நடவடிக்கை:அனைத்து அலுவலர்களும் தமது செல்போனை எந்தக் காரணம் கொண்டும் ஆப் செய்து வைக்கக்கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார்.

மேலும், மழைக் காலங்களில் தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படாமல், மின்சார பணிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள வாக்கி டாக்கி இயந்திரங்களை உடனடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும், மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details