சென்னை:கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை மற்றும் சுகாதாரத் துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி ஆலோசனைகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்திட வேண்டும். போலீசார் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி.
இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் 2990 பாதுகாப்பு காவலர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள புற காவல் நிலையங்களில் தற்பொழுது 3 காவலர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை ஒரு ஷிப்ட்டிற்கு 3 பேர் வீதம் 9 பேர் நியமிக்கப்பட உள்ளனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின் படி 25 சிசிடிவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.