சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், வன்முறை கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர். இதன் மூலம் அவர்களது நன்மதிப்பையும் பெற்று வந்தார்.
அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு என்ன பின்னணி என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு () தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, தனியார் உணவு டெலிவரி செய்யும் ஆடையை அணிந்து வந்த 4 பேர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அப்போது அங்கு பட்டாக் கத்தியுடன் வந்த 6 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங், கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக சென்னை போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகின்றனர். மேலும், பெரம்பூர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் படுகொலை; 8 தனிப்படைகள் அமைப்பு.. ஈபிஎஸ், அண்ணாமலை கண்டனம்! - BSP TN Unit President Murder