சென்னை :தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு எழுதி உள்ள மடலில், "அரசின் ஒவ்வொரு திட்டமும், செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தருவதை உறுதி செய்வதற்காக முதலமைச்சர் என்ற முறையில் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதை அக்டோபர் 22ம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அறிவித்தேன்.
அதன்படியே கடந்த நவ 5, 6 இரண்டு நாட்களிலும் கோயம்புத்தூரில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் பயணமானேன். அங்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் - இளைஞர்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். புன்னகைத்து, கையசைத்து, 'அடுத்ததும் உங்க ஆட்சிதான்' என்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி ஐ.டி. காரிடார் (ஓ.எம்.ஆர். சாலை) போல கோயம்புத்தூரில் டைடல் பூங்கா பகுதி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளைஞர்களின் வாழ்வுக்கு வளமான எதிர்காலத்தைக் கட்டமைத்துத் தரும் இடமாக இன்று உருவாகியுள்ளது.
நில எடுப்பு விலக்களிப்பு ஆணை : கோயம்புத்தூர் வடக்கு வட்டத்திலும், தெற்கு வட்டத்திலும் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு 5,386 குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு உருவானது. தங்களுக்குரிய நிலத்தை விற்கவும், வாங்கவும், முடியாமல் பல ஆண்டுகளாக தவித்த மக்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கிய நிம்மதிப் பரிசுதான் இந்த நில எடுப்பு விலக்களிப்பு ஆணை.
அதனை வழங்குகிற விழாவில் துறையின் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் பங்கேற்றார். விலக்களிப்பு ஆணைகளைப் பெற்றுக் கொண்ட மக்களின் நன்றி அவர்களின் கண்களில் துளிர்த்ததைக் கண்டேன். காலை நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மதிய உணவுக்காக சர்க்யூட் ஹவுஸ் செல்லும்போது, தங்க நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு ஒன்றை நம்பிக்கையுடன் அளித்தனர்.