சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறையின் 'மக்களைத்தேடி மருத்துவம்' என்ற திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
வழங்கப்படும் சிகிச்சைகள்:45 வயதிற்கும் மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை அவரவர் இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. தற்போது இத்திட்டமானது 1 கோடி பயனாளிகளை தாண்டி செயல்பட்டு வருகிறது என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க :“மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஒரு கோடி பயனாளிகளை தாண்டி செயல்படுகிறது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்திய துணைக் கண்டத்துக்கே முன்னோடி திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது.
ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024ம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது.
இந்தத் திட்டத்தைச் சிறப்பான முறையில் செயல்படுத்தி கண்காணித்து மேம்படுத்தி வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதி செய்வோம்" என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்