சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில், சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய அவர், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணா வழி நடந்து, கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ் சிறந்த பல திட்டங்களை உருவாக்கி வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இதுவரை 29 ஆயிரத்து 439 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 462 தனி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், 172 திட்டப் பகுதிகளில் 79 ஆயிரத்து 94 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 89 ஆயிரத்து 429 தனி வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளுக்காக ரூ.6 ஆயிரத்து 685 கோடி செலவிடப்பட்டுள்ளது. புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணியில் மட்டும் கவனம் செலுத்தி அத்துடன் நின்றுவிடாமல், இந்த அரசு பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறுசீரமைப்பிலும் கவனம் செலுத்துகிறது.
சென்னை மற்றும் இதர நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில நீண்டகாலப் பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்துள்ளன.