சென்னை:தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ வந்தடைந்தார். சிகாகோ விமான நிலையத்தில், முதலமைச்சருக்கு தமிழ் சங்கங்கள் உற்சாக வரவேற்பை அளித்தன.
இந்நிலையில் சிகாகோவில், BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். BNY மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி நிதி பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாகும்.
இந்த வங்கி சொத்து சேவை, கருவூல சேவை, முதலீடுகள் மேலாண்மை போன்ற சேவைகளை அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இவ்வங்கிக்கு பல கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.