சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள், (IND-TN-10-MO-1825, IND-TN-10-MO-1826, IND-TN-10-MO-1458 மற்றும் IND-TN-10-MO-1487) ஆகிய பதிவு எண்களைக் கொண்ட அவர்களது நான்கு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (ஆக.9) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிக்கிறது.
அண்மையில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த நிலையில், மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்த பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ, தீர்வோ ஏற்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், "நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால், மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது.