தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வெளியிட்ட 4 புதிய அறிவிப்புகள்! - முழுவிவரம் இதோ!

நாமக்கல் மாவட்டத்தில் கருணாநிதியின் உருவசிலையை திறந்து வைத்த முதலமைச்சர், மாவட்டத்திற்கு 4 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். மேலும், திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது எனவும், அதிமுகவின் செல்வாக்கு குறைந்து விட்டது எனவும் மேடையில் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்தார். முன்னதாக, பரமத்தி சாலை, செலம்ப கவுண்டர் பூங்காவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார்.

அதன்பின் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். அப்போது சுமார் ரூ.810 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த திட்ட பணிகளை துவக்கியும் வைத்தார்.

அதன்பின் 24 துறைகளின் சார்பில் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், நாமக்கல் முதலைப்பட்டியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தையும், புதிய சட்டக்கல்லூரி கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

அதன்பின் விழா மேடையில், "தமிழன் என்றோர் இனமுண்டு.. தனியே அவற்கொரு குணமுண்டு" என நாமக்கல் கவிஞர் இராமலிங்கனாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேச்சை துவங்கினார்.

அப்போது பேசிய அவர், "நாமக்கல்லில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. நாமக்கல்லில் அவரது சிலையை திறந்து வைத்தது மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனெனில் கடந்த 1997ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் தனியாக பிரித்தது கருணாநிதி தான்.

சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாபெரும் கட்டடத்தை அமைத்து அதற்கு "நாமக்கல் கவிஞர் மாளிகை" என 50 ஆண்டுகளுக்கு முன்பே பெயர் சூட்டியவர் கருணாநிதி. அவரின் உருவசிலை நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டதற்கு பெருமை கொள்கிறேன்.

லாரி கட்டமைப்பை உருவாக்கி சரக்கு போக்குவரத்து தொழிலுக்கு அடித்தளமிட்டது நாமக்கல் மாவட்டம். முட்டை உற்பத்தி, வேளாண்மை என அனைத்து தொழில்களிலும் செழிப்பான மாவட்டமாகவும் நாமக்கல் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் நாமக்கல் உள்ளது.

அப்படிப்பட்ட மாவட்டத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். அவர் விளிம்பு நிலை மக்களை உயர்த்துவதில் பெரும் பங்கு வகிப்பார் என்பதில் ஐயமில்லை. அருந்ததியருக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது திமுக அரசு.

கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து தினசரி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறேன். அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரிடையாக நானே சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

இதையும் படிங்க :கருணாநிதி வெண்கல சிலை; நாமக்கல்லில் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

புதிய அறிவிப்புகள் :நாமக்கல் மாநகராட்சியின் உட்கட்டமைப்பு பணிக்கு ரூ.10 கோடியும், சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதியில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடிய வகையில், குளிர் பதனக்கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிப்பு நிலையம் அமைக்க ரூ.4 கோடியும், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தார் சாலை அமைக்க ரூ.30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி 10.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. புதிய தொழில்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழலில், திமுகவிற்கு வாக்களித்தவர்கள் மட்டுமின்றி வாக்களிக்காதவர்களும் கூட பாராட்டும் அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால் எதிர்கட்சித்தலைவர் திமுகவின் செல்வாக்கு சரிந்து விட்டது எனக் கூறி வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருந்து வருகிறார். அவர் கூறுவதை நான் பெரிதும் எடுத்துக்கொள்வதில்லை. அதனை மக்கள் நகைச்சுவையாக நினைக்கின்றனர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டை அடமானம் வைத்தார்கள். அதிமுகவின் செல்வாக்கு தான் சரிந்து விட்டது. குறிப்பாக, மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என கூறி வந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் அதிமுகவிற்கு மேற்கு மாவட்டத்தின் செல்வாக்கு சரிந்து விட்டது. மக்களான உங்கள் மேல் நம்பிக்கை வைத்து நான் சொல்கிறேன்.

அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர வைப்போம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்துவோம்" என தெரிவித்தார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ராஜேந்திரன், மதிவேந்தன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details