சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
இதன் பிறகு நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த வாரம் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி என்ன காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் பார்க்க தொடங்கியிருக்கிறோம். வானிலை கணிப்புகளை விட அதிகமான மழை கொட்டி தீர்க்கும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும், உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இந்த மாற்றத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எல்லா நாட்டிலும் நடப்பதுதான் அப்படி என்ற காரணத்தினால், நம்முடைய தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததில்லை.
நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்புகள் பெரிதும் ஏற்படவில்லை என்பது முக்கியம். ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிகமான அளவிற்கு மழை பெய்து, பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை, நிவாரணத்தை மழை தொடங்கியதிலிருந்து இப்போது வரைக்கும் தமிழ்நாடு அரசு செய்துகொண்டு தான் இருக்கிறது.
மத்திய அரசிடமிருந்தும் நிதியும் நாங்கள் கேட்டிருக்கிறோம். விரைவில் இந்த பாதிப்பிலிருந்து நிச்சயமாக நாம் மீண்டு வருவோம். கடந்த காலங்களில் மழை, வெள்ளத்தில் தவித்த சென்னையை மீட்டெடுத்திருப்பது போன்று, மற்ற பகுதிகளையும் விரைவாக மீட்டெடுப்போம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும். இப்போதே சில மாவட்டங்கள் முழுமையாக மீண்டு வந்துக் கொண்டிருக்கிறது.
அல்லல்படும் மக்களின் வேதனையில் அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாமா என்று சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஆட்சியில், அது எந்த ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். 2015 செயற்கை வெள்ளத்திலும், பல்வேறு புயல்களிலும் சென்னையை வெள்ளத்தில் மிதக்கவிட்டது போன்று, இப்போது நாங்கள் தவிக்க விடவில்லை.
அதற்கு ஃபெஞ்சல் புயலில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளும் நம்முடைய பணிகளும் தான் அதற்கு சாட்சி. முன்பெல்லாம் சென்னையில் மழை பெய்தால், உதவி கேட்டு அல்லாடும் நிலையும், தன்னார்வலர்களிடம் உதவி கேட்டு சோஷியல் மீடியாவில் பதிவிடும் நிலையும், எப்போது வெள்ளம் வடியும் என்று காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.
ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும் என்ன பிரச்னை என்றும் தெரியாமல், வாக்காளர் பெருமக்கள் என்று பேசியவர்கள் இருந்தார்கள். மீடியாக்கள் மைக்கை நீட்டினால், பதில் சொல்லாமல், "ப்ளீஸ் விட்டுடுங்க"என்று சொன்னவர்கள் தான் இருந்தார்கள், கடந்த கால ஆட்சியில். தன்னார்வலர்கள் உதவி செய்ய வந்தால், அவர்களை மிரட்டுவார்கள். அவர்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது.