தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; "பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது" - அதிமுகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்! - TUNGSTEN MINE ISSUE

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 10:58 PM IST

சென்னை : மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது.

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுக செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” என ராஜ்ய சபா எம்.பி தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.

அதிமுக ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதா தான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அதிமுக ஆதரித்தது.

இதையும் படிங்க :"முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்"..அவையில் சூளுரைத்த முதல்வர்! தீர்மானத்தின் மீது ஈபிஎஸ் எடுத்த முடிவு என்ன?

டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார். அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை.

இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அதிமுக ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது. அதிமுகவின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது.

டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அதிமுக ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா?

இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடி கூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.

ABOUT THE AUTHOR

...view details