சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.23) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், "முதலமைச்சர் என்ற முறையில் தினமும் பல்வேறு துறைகள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்று காவல்துறை சார்பாக நடக்கும் விழாவில் பங்கெடுக்கிறேன் என்று சொன்னால் என்னுடைய துறையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.
எல்லாத் துறைகளும் என்னுடைய துறைகள்தான். இருந்தாலும், காவல்துறையினர் என்னை அதிகம் உரிமை கொண்டாடிக் கொள்ள முடியும் என்பதுதான் உண்மை. என் துறையைச் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதக்கங்களைப் பெற்றிருப்பதை பார்க்கும்போது நான் பதக்கம் வாங்கியதுபோல எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ள காவலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
காவல்துறை: இந்த பதக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும், திறமையும் தலைவணங்கத்தக்க அம்சமாகும். தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்கிறது என்றால், அந்தப் பெருமையில் தமிழ்நாடு காவல்துறைக்கு பெரும் பங்கு இருக்கிறது.
அமைதியான மாநிலத்தில் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சிக் குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இத்தகைய பெருமையை அரசுக்கு உருவாக்கித் தரும் காவலர்கள் எல்லோருமே பதக்கங்களுக்கு தகுதி படைத்தவர்கள் தான்.
சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் பதக்கமும், விருதும் வழங்கி பாராட்டுவதை 1969-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படும் காவல் அதிகாரிகளையும், காவல் ஆளிநர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். இதுபோன்ற பதக்கங்கள் வழங்கப்படுவதும், அதற்காக விழா நடத்துவதும், இதுபோன்ற பதக்கங்களை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கத்தான்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நெறிகளைப் பின்பற்றி அல்லும், பகலும் உழைத்தால், அவர்கள் போற்றப்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உங்கள் கடமையை நீங்கள் செய்தால் அதற்கான பாராட்டும், பலனும் உங்களைத் தேடி வந்து சேரும். அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா.
காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல் காவல் ஆணையத்தை அமைத்தவர் கருணாநிதி. பின்னர், ஐந்தாவது காவல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் திராவிட மாடல் அரசு அமைத்திருக்கிறது. மக்களைப் பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
அந்த அடிப்படையில் தான் இந்த ஆணையத்தை அமைத்து காவலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து வருகிறோம். காவல்துறையை மேலும் நவீனமயமாக்கி வருகிறோம். கடந்த மூன்றாண்டு காலத்தில் காவல்துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், காவல்துறையை நவீனமயமாக்கவும், காவலர் நலனைப் பாதுகாக்கவும் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.