சென்னை: குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், நேற்று (ஜூன் 12) ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சியைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னையைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்கு குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இந்தியாவை வந்தடையும் தமிழர்களின் உடல்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.