சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர்க்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் ஆரம்பமானது.
அப்போது கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேச ஆரம்பித்தபோது சபாநாயகர் அனுமதி கொடுக்க மறுத்த நிலையில், அவர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு, எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்' என்ற பதிவினை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் , "எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்யாமல் அவைக்குள் இருந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் இதுபோன்று முக்கியமான பிரச்னையிலும், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகளோடு சேர்ந்து வெளியே சென்றுவிட்டார். அவருக்கும் சேர்த்து நான் பின்வரும் விவரங்களை சட்டப்பேரவை தலைவர் வாயிலாக இந்த விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தைச் சேர்ந்த 47 நபர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய காரணத்தினால் உயிரிழந்தனர். இந்த துயரமான சம்பவம் குறித்து நானும் மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் கன்னுக்குட்டி என்பவர் போலீசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200லி மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய 3 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரியிலிருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் எனக்கு தெரிந்ததும், கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டேன். நேற்று காலையில் ஆய்வுக் கூட்டத்தை உயரதிகாரிகளோடு நடத்தினேன்.
இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதி, மா.சுப்பிரமணியன் ஆகிய 3 அமைச்சர்களையும் மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தேன். அமைச்சர்கள் மட்டுமில்லாமல், உள்துறைச் செயலாளர், டிஜிபியையும் நேரில் சென்று இரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டேன். அந்த அறிக்கை கிடைத்ததும், அதன் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன். வேதனையை அளித்துள்ள இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று முதல்வர் பேசி உள்ளார்.
மேலும், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவைச் சேர்ந்த காவல் துணைக்கண்காணிப்பாளர், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர், திருக்கோவிலூர் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர், திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர், திருக்கோவிலூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், எழுத்தர், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் காவல் நிலைய துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கினை உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டேன். அண்டை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மெத்தனால் சட்டவிரோதமாக, கள்ளத்தனமான முறையில் இந்த மாநிலத்திற்குள் கொண்டு வரப்பட்டு இதுபோன்று சம்பவங்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இந்த அரசானது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்ற சில விரும்பத்தகாத நிகழ்வு ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரண நிதியோடு பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. பெற்றோர் ஒருவரையோ (அ ) இருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்.
பெற்றோர் இருவரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு பராமரிப்பின் கீழ் வளர அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். உடனடி நிவாரண தொகையாக அவர்களின் பெயரில் ரூ.5 லட்சம் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்த தொகை வட்டியோடு அவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஒருநபர் ஆணையம்:கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் அவர்களின் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறையைக் கவனிப்பவன் என்பதில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் இந்த பிரச்னையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல, பொறுப்பை உணர்ந்து பொறுப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கையைப் பட்டியலிட்டுள்ளேன்.
குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டு தான் உங்களுக்குப் பதிலளித்துள்ளேன். திறந்த மனதோடு இரும்புக்கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன். எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர்கள், காவல் துறை உயரதிகாரிகள் விசாரிக்கப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை மக்கள் மறக்கவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. அதை வைத்து நான் அரசியல் பேச விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை சமூகவிரோத சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என நான் உறுதி அளிக்கிறேன்" என அந்த வீடியோவில் முதல்வர் கூறி உள்ளார்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மரணம்; பேரவையில் அமளி... அதிமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றம்! - Kallakurichi Illicit liquor tragedy