கோயம்புத்தூர்:கோடை காலத்தின் வெயில் கொடுமையைச் சமாளிக்க ஆண்டுதோறும் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களுக்குச் செல்வது வழக்கம். தற்போது கோடை காலம் தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சதமடித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட, அதிகப்படியான மக்கள் குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளை தேடிச் சென்று வருகின்றனர்.
இது அந்த மலைப்பிரதேசங்களில் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அதனைக் கட்டுப்படுத்த, கரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையைப் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. அதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து நீலகிரி மாவட்டம் செல்லக்கூடிய ஊட்டி சாலையில், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு தூரி பாலம் சோதனைச்சாவடி, கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி சோதனைச்சாவடி என இரு இடங்களில் இ-பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே, அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இ-பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி இ-பாஸ் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மேட்டுப்பாளையம் கல்லாறு தூரி பாலம் அருகே செயல்பட்டு வரும் சோதனைச்சாவடியில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.